FWC

மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தல்

அறிமுகம்

கல்வி என்பது தனித்துவ அறிவினை வழங்குகின்ற ஒரு செயற்பாடாக மட்டும் அமைவதில்லை. மாணவர்களின் பல்வேறு வகைப்பட்ட திறமைகளை இனங்கண்டு, அவற்றை வளர்த்துவிடுவதாக இருக்க வேண்டும். இன்றைய மாணவர்களே எதிர்காலத்தின் சமூக அங்கத்தவர்களாக மாற்றமடைகின்றனர். இத்தைய மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அம்மாற்றம் பயனுள்ள பயனுள்ள மாற்றமாக அமையவேண்டுமானால், பல்வேறு வகையான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வது ஆசிரியர்களினது கடைமையாகும். மாணவர்களை இல்டசிய வழிநின்று தம் செயற்பாடுகளை முன்நகர்த்திச் செல்வதற்கு வழி காட்டுதல் அவசியமாகும். மன உறுதியும் தைரியமும் கொண்டவர்களாக உருவாக்கப்பட வேண்டும். இதற்காக அவர்களைச் சிறந்த தலைமைத்துவப் பண்பு கொண்டவர்களாக மாற்றிட வேண்டும். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தலைமை தாங்க வேண்டியவர்களாக இருப்பர். இத்தகைய சந்தர்ப்பங்களில் தலைமைத்துவப் பண்புகள் விருத்தியடையாமல் இருக்கும் நிலை சில பொறுப்புக்களை ஏற்பதில் இருந்து பின்வாங்கும் நிலையைக் காண முடிகிறது.

தலைமைத்துவ விளக்கம்

தலைமைத்துவப் பண்பு மனிதர்களிடம் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களிலும் மேலோங்கிக் காணப்படுகின்றது. மிருகங்களில் மாடு தலைமைத்துவப் பண்புக்கு உதாரணமாகவும், பறவைகளில் காகம் உதாரணமாகவும் கூறப்படுவதுண்டு. ஒரு மிருகமோ அல்லது பறவையோ ஒரு பாதைக்குச் செல்லும்போது ஏனையவைகளும் அதன் பின்னர் தொடருகின்றன. இதே போன்று மனிதர்களது தலைமைத்துவப் பண்பு குடும்பங்களிலிருந்து ஆரம்பமாகின்றது. குடும்பத்தில் தலைவன் தலைமைத்துவ உணர்வு உடையவனாக இருந்தான். இதனால் தலைவன் எனப்பட்டான். பெண்களையும் குடும்பத்தலைவி, இல்லத்தலைவி எனக் கூறுவர். குடும்பத்தில் ஏதோ ஒருவரின் தலைமையை ஏற்று வழிவழியாகக் குடும்பங்கள் முன்நகர்த்திச் செல்லப்பட்டன. எனவே, தலைமை சரியாக இல்லாவிடில் குடும்பங்கள் சீரழியும் நிலையும் காணப்படும்.

ஒரு முகாமைத்துவத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று தலைமைத்துவமாகும். குறிக்கப்பட்ட ஒரு துறையில் ஏனையோர்களைநெறிப்படுத்தும் தலைமைத்துவம் உடையவர்கள் தலைமைத்துவம் உடையவராவார். ஒரு பணியைச் செய்வதற்கு நெறிப்பாட்டைத் தருகின்றது. தலைமை தாங்கும் உணர்வு என்பதில் இருந்து தோன்றிய ஒரு சொல்லாகத் தலைமைத்துவம் என்பது அமைகின்றது. ஒரு செயலை ஒருவர் எவ்வாறு சரியாகச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றாரோ அதற்கேற்றவகையில் ஏனையோர்களையும் வழிநடத்தும் செயற்பாடு தலைமைத்துவம் ஆகும். எந்த ஒரு நிறுவனத்திலும் தனது ஊழியர்களை நெறிப்படுத்துபவர் ஒரு தலைவர் ஆவார். அவர்களிடம் தலைமைத்துவப் பண்பு இருக்க வேண்டும். இப்பண்பு இல்லாதவர்கள் எந்தவொரு நிறுவனத்தையும் நடத்தும் திறன் அற்றவர்கள்.

பிள்ளைகளினது ஆளுமை வளர்ச்சி, சமூகப் பொருளாதார நிலையங்களில் முன்னேற்றுதல், சிறந்த எதிர்காலத் திட்டங்களைத் தீட்டுதல் என்பவற்றுக்கெல்லாம் தலைமைத்துவப் பண்பு முக்கியமானது. கல்விசார் செயற்பாடுகளையும், நடைமுறைகளையும் ஆற்றல் வாய்ந்ததாக மாறக்கூடியது தலைமைத்துவப் பண்பாகும். மனிதவள மேம்பாடு (Human Resource Development) தனியாள் திறமையை அடையாளம் கண்டு அத்திறமையை நன்கு பயனுள்ள வகையில் மாற்றுதல் என்பவற்றுக்கெல்லாம் ஒருவன் தலைமைத்துவப் பண்பைக் கொண்டவனாக இருத்தல் அவசியமாகும்.

தலைமைத்துவம் என்பது உயிரோடட்டமுள்ளது. விழிப்பானது, செயற்பாடுகளை உணர்த்தும் தன்மை கொண்டது. தத்துவரூபமானது. ஒரு நடைமுறைச் செயற்பாடு, உண்மைத் தொழிற்பாட்டை வெளிக்கொணருகின்றதுஎன்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகின்றது. ஒரு வகுப்பறையிலோ அல்லது பாடசாலையிலோ ஒரு குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு அங்கு கிடைக்கும் மனித, பௌதீக வளங்களினை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பது ஒரு தலைவருக்கு விளக்கம் இருத்தல் வேண்டும்.தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட ஒரு தலைவன் தனக்கு கீழ் உள்ளவர்களைக் கொண்டு சரியான முறையில் கருமங்களைச் செய்விக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து தாமும் இயங்க வேண்டும்.

தலைமைத்துவப் பண்புகளை ஒரு தலைவர் கொண்டிருத்தல் அவசியமாகும். இவ்வகையில் ஒரு தலைவரிடம் இருக்கவேண்டிய பண்புகளாவன,

  • சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டிருத்தல்.
  • நிறுவனத்தின் இலக்குகள், நோக்கங்கள் பற்றிய தெளிவான சிந்தனையிருத்தல்.
  • இயலுமானவரை முரண்பாடுகளை நீக்கிவிடுதல்.
  • நிறுவனத்தின் தரத்தினை உறுதிப்படுத்தல்.
  • அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்தாதிருத்தல்.
  • ஊழியர்களை அன்புடன் நடத்துதல்.
  • ஊழியர்களின் பிரச்சினைகளை விளங்கி நியாயமான முறையில் நடத்துதல்.
  • ஊழியர்கள் மத்தியில் பராபட்சம் காட்டாதிருத்தல்.
  • முடிவெடுப்பதில் ஏனையவர்களுடைய ஆலோசனையைக் கேட்டல்.
  • எதற்கும் காலதாமதம் ஏற்படாதிருத்தல்.
  • ஊழியர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்குபற்றல்.

இத்தகைய பண்புகள் ஒரு தலைவனிடம் இருக்கும் போது அவர் தனது பணிகளை இலகுவில் முன்நகர்த்திச் செல்வது இலகுவானது.

வகுப்பறைத் தலைமைத்துவம்

வகுப்பறையில் மட்டும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட தலைவனாக ஒருவன் விளங்கினால் மட்டும் போதாது. பல்வேறு நிலையங்களில் தலைவனாகச் செயற்படும் சந்தர்ப்பங்கள் ஒருவனுக்குக் கிடைக்கின்றன. குடும்பத்தில் ஒரு தலைவன், தொழில் உலகில் தலைவன், கூட்டத்தில் தலைமை தாங்கும் ஒரு தலைவன் ஒரு குழுவில் தலைவன், சமூக நிகழ்வுகளில் ஒரு தலைவன் என்ற வகையில் பல வேடங்களைத் தாங்கிக்கொள்ளும் மனிதர்களைக் காண முடியும்.

மாணவர்களைப் பொறுத்தமட்டில் வகுப்பறையில் மட்டுமல்லாமல் பாடசாலையிலும் மாணவ தலைவனாகச் செயற்படும் சந்தர்ப்பங்கள் உண்டு எனலாம். இத்தைகைய தலைமைத்துவப் பண்புகள் நிரம்பப் பெற்ற ஒருவனிடம் ஆளுமை வளர்ச்சிக்கு முதலில் அத்திவாரமிடுவது குடும்பமாகும். ஆகவே, குடும்பம் நன்கு திட்டமிட்ட செயல்களினூடாகப் பிள்ளைகளை ஆளுமையுள்ளவர்களாக மாற்றிவிட வேண்டும். குடும்பமானது பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு காரணமாயிருக்கலாம் அல்லது முற்றுமுழுதாக அதன் வளர்ச்சியைத் தடைசெய்யலாம்.

தலைமைப்பண்பு கொண்டவரிடம் ஆளுமை இருக்கும் என்று ஆளுமைப் பண்பு கொண்டவர் சிறந்த தலைவராகவும் இருப்பர் எனவும் கருதலாம். ஆளுமையின் உயர்ந்த வடிவம் தலைமைத்துவம் என்ற கருத்தும் காணப்படுகின்றது. ஒருவன் தன்னிடமிருக்கும் ஆளுமைப் பண்பின் மூலம் மற்றவர்களைக் கவருவான். அதாவது பிறரைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட பண்பில் அல்லது திறனில் சிறந்து விளங்குரியவை ஆளுமையுடையவன் எனலாம்.

வகுப்பறையில் மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை விருத்திசெய்தலில் ஆசிரியர்களின் பணி இன்றியமையாதது. வகுப்பறையில் தனது சகபாடிகளைத் தனது தந்திரத்தாலும், நுட்பத்தினாலும், ஆளுமைத் திறனினாலும் நெறிப்படுத்தல் ஒரு தலைமையினுடைய கடமையாகும். இங்கு தலைவன் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது. குறிக்கப்பட்ட ஒரு செயலானது எப்படி இருக்க வேண்டும் என்று தலைவர் எண்ணுகிறாரோ அதற்கு முன்னோடியாக நடப்பதற்கு முதலில் தன்னைத் தயார்படுத்த வேண்டும். அதன்பின் தனக்குக் கீழ் இருக்கும் மனவர்களைத் தான் விரும்பியவாறு தொழிற்பட வைக்கும் திறமை அவனிடம் இருக்க வேண்டும்.  இது நேர்க் கணிய செல்வாக்கு எனப்படும். இது மறுபுறமாக அமையின் அது எதிர்க் கணிய செல்வாக்கு ஆகும்.

வகுப்பறைக்கு வெளியிலான தலைமைத்துவம்

  1. நேரத்திற்கான பாடசாலை வருகை
    வகுப்பறைக்கு வெளியே ஏனைய இணைப்படவிதானச் செயற்பாடுகள் ஊடாக மாணவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்துவிடுதல் சிறப்பானதாகும். மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு வருகைதருதல் வேண்டும். இதிலிருந்து தான் குழந்தையின் பாடசாலை ஒழுக்கச் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. ஏனெனில் மாணவர்களுக்கு நேரத்தின் அருமை பற்றித் தெரிந்திருத்தல் அவசியமானதாகும். சரியானதொரு வகுப்பறை முகாமையிலே பிள்ளைகளின் நேரத்துக்கான வருகை என்பது முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் நேரமுகாமை என்பது நமது நேரத்தை பயன்பெறும் முறையில் செலவிட மேற்கொள்ளப்படும் ஒரு சுயநிர்வாக முறையாகும்.பிள்ளைகள் நேரம் தாமதித்து வருவதற்கான காரணிகளைக் கண்டறிதல் பாடசாலை நிர்வாகத்தினதும் வகுப்பாசிரியரினதும் கடைமையாகும்.  அத்துடன் பெற்றோர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே மாணவர்கள் நேரத்தை சிறந்த முறையில் பங்கீடு செய்யத் தெரிந்தால் ஏனைய வேலைகள் யாவற்றையும் வெற்றிகரமாகச் செய்யும் திறமை ஏற்படும்.
  2. கல்விச் செயற்பாடுகளில் ஆர்வம்
    சிறந்த தலைமைத்துவப் பண்புகளை பெற்ற ஒரு மாணவன் கல்வி நடவடிக்கைகளையும் சிறப்பாக முன்னெடுத்து வருவான். ஆளுமை, தலைமைத்துவப் பண்புகள் அதிகமாக இருக்கும் போது பாடசாலைகளின் சகல செயற்பாடுகளிலும் பங்குகொள்ளும் விருப்பம் ஏற்படும். பாடசாலையின் காலைக்கூட்டம், பிரார்த்தனை போன்ற செயற்பாடுகளோடு பாடசாலை ஆரம்பமாகும். அந்தச் செயற்பாடுகளில் ஈடுபடும் தன்மையை அவர்களிடம் ஏற்படுத்தி விட வேண்டும். காலைக்கூட்டத்தில் ஏதோ தனக்கு தெரிந்த சில நல்ல கருத்துக்களைக் கூறும் தைரியத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தி விட வேண்டும்.
    வகுப்பிலும், வகுப்பறைக்கு வெளியிலும் ஏனைய இணைப்படவிதானச் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். கல்வியைச் சிறந்த முறையில் கற்று மாணவர்கள் முன்னேறுவதற்கான சில நுட்பங்களை ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு அவனிடத்தில் எதிர்கால இல்டசியங்களை வளர்த்து விடுதல் ஆசிரியர்களின் கடமையாகும். வகுப்பறையில் திறமையாகச் செயற்படும் மாணவர்களிடத்தில் பெரும்பாலும் ஆளுமைப் பண்புகள் இருக்கும். மாறாகச் சில மாணவர்கள் நன்கு கற்பார்கள். ஆனால் ஏனைய செயற்பாடுகள் எதிலும் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி இருக்கும் நிலையும் உண்டு. இவர்கள் ஆசிரியர்களால் நன்கு கவனிக்கத்தக்கவர்களாகின்றனர்.
  3. விளையாட்டுக்களில் பங்குபற்றல் 
    பாடசாலைகளில் விளையாட்டுகளினூடகத் தலைமைத்துவப் பண்புகளை வளத்தெடுக்க முடியும். விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பிளேட்டோவின் காலத்திலேயே உணரப்பட்டிருந்தது. பாடசாலைகள் எல்லாம் உடற்பயிற்சி மையங்களாக விளங்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார். உறுதி உடலிலேதான் உறுதியான உள்ளமும் இருக்கும் என்ற கருத்தானது உறுதியான உள்ளத்தைப் பெற்றிருப்பவன் சிறந்ததொரு தலைவனாகச் செயற்படுவதற்கான தகுதிகளைப் பெற்றிருப்பான் என்று நம்பப்படுகின்றது.
    இன்றைய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை எடுத்து நோக்கும் போது எல்லோரும் தலைமைத்துவம் நிறைந்தவர்களாக விளங்குகின்றார்கள். அவர்கள் விளையாட்டினூடாகத் தலைமைத்துவத்தையும் ஆளுமையையும் பெற்றுக்கொண்டார்கள். இதனால் பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டியிலிருந்து எல்லா வகையான போட்டிகளிலும் பிள்ளை பங்குபெற வேண்டும். இதன்மூலம் சிறந்த தலைமைத்துவப் பண்பை வளர்க்கலாம்.
  4. குடும்பத்தில் பங்கேற்றல் 
    பிள்ளைகள் எதிலும் பங்கேற்பதன் மூலம் சிறந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். அதன்மூலம் தலைமைத்துவப் பண்பு வளர்கின்றது. சமுதாயத்தின் ஆணிவேராகத் திகழ்கின்ற குடும்பமானது வளர்ச்சியின் பொருட்டுப் பல விடயங்களை ஆற்றவேண்டியும், குடும்பமானது பிள்ளைகளின் வளர்ச்சியில் ஒன்றில் அவர்களை வளர்த்து விடுகின்றது. இல்லையேல் அழித்து விடுகின்றது. இதனால் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அவர்களையும் குடும்பம் இணைத்துக்கொள்ள வேண்டும். சம்பவம் நடக்கும் இடத்தில் பிள்ளைகள் இருக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகள் தொடர்பான கணிப்புத் தேவை நிறைவு செய்யப்படுகின்றது. தனக்கும் ஒரு இடமுண்டு என்ற பிள்ளையின் எண்ணம் அதனுடைய ஆளுமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்து விடுகின்றது.
  5. சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்தல் 
    இன்று ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு கூறாகவே உள்ளான். இதனால் சமூக விலங்கு எனப்படுகின்றான். ஆகவே தனது வாழ்க்கைக் காலத்தில் சமூகத்தில் தனக்கு இருக்கும் உரிமைகளையும் கடமைகளையும் பற்றி அறிய வேண்டும். ஒரு பிள்ளை தான் வாழும் சமூகத்தின் நியமங்களுக்கு ஏற்ப தனது நடத்தையை மாற்றியமைக்கும் நிலையில் பிள்ளை சமூகமயப்படுத்தப்படுகின்றான் எனப்படுகின்றது. எனவே சமூகத்தில் தான் பெறுமதிமிக்க பிரஜை என்ற எண்ணம் அவனிடத்தில் ஏற்படும் வகையில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் வழிநடத்த வேண்டும்.
    சமூகத்தில் இடம்பெறும் கல்வி நிகழ்வுகள், விழாக்கள், போட்டிகள், ஏனைய இன்ப துன்ப நிகழ்வுகளிலே பங்குபெறும் போது தானும் ஓர் பெறுமதிமிக்க பிரஜை என்ற உணர்வு அவர்களுள் ஏற்படுகின்றது. இதனால் பிள்ளைகளுக்குப் பொருத்தமான நிகழ்வுகளில் அவர்களைப் பங்குபெற கலத்தல் பெரியோர்களின் கடமையாகும்.
    இவ்வகையில் தனித்து ஒரு பிள்ளையின் தலைமைத்துவப் பண்புகள் கல்வியால் மட்டும் வருவதால் பல்வேறு வகைப்பட்ட நிகழ்வுகள் அவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து விடுகின்றன. இன்று பாடசாலைகளில் அவர்களிடையே சிறந்த ஆளுமை தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தலில் பல இடர்காரணிகள் செயற்படுகின்றன.
  • பெற்றோர்களது வழிகாட்டலின்மை
  • ஆசிரியர்களது முழுமையான ஒத்துழைப்புக் கிடையாமை.
  • நேரமுகாமை பற்றி அறியாதிருத்தல்.
  • சமூக அடுக்கமைவில் உள்ள குறைபாடுகள்
  • குடும்ப பொருளாதார நிலைமை
  • கட்டிளமைப் பருவப் பிரச்சினைகள்
  • போதியளவு பயிற்சியின்மை
  • சரியான திட்டங்கள் இல்லாத வாழ்க்கை

இதனால் பாடசாலையானது சில செயல்களை முன்னெடுக்க வேண்டும்.

  • பெற்றோர்களுக்குப் போதிய விளக்கம் கொடுக்க வேண்டும்.
  • பொருத்தமான கலைத்திட்டச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • சிறந்த ஆசிரிய ஆளணியினரின் சேவைகளை பயன்படுத்த வேண்டும்.
  • பாடசாலை நிகழ்வுகளில் மாணவர்கள் பங்குபற்றும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த  வேண்டும்.
  • ஆசிரிய மாணவ உறவின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும்.
  • ஆசிரியர்கள் உளவியல் சமூகவியல் அறிவு தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
  • எப்போதும் சமத்துவ உணர்வைப் பாடசாலைகள் கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இன்றைய மாணவ சமுதாயம் நாளைய பெறுமதி மிக்க பிரஜைகள் என்ற உணர்வில் அவர்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழும் மன உறுதி, உடல் உறுதி உள்ளவர்களாக மாற்றப்பட வேண்டும். எனவே, ஒரு தலைமைத்துவத்திற்கு என்னென்ன பண்புகள் இருக்க வேண்டுமோ அவைகளை எவ்வாறு எப்படி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நுட்பத்துடன் ஆசிரியர்கள் செயற்படும் போது மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து விடலாம்.

 

 

 

 

 

 

Leave a Comment