FWC

மனப்பாடம் செய்யாதீர்கள் மனப்படம் செய்யுங்கள்

நினைவாற்றல் …… இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்முடைய தேர்வு அமைப்புக்களும் பணித்திறனும் நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டிற்கு ஏற்றவாறே அமைந்துள்ளன. சிறப்பு பெறுகின்றன!

இங்கே பாடசாலை பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புக்களை தருகிறார். சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ் 17 வருடங்கள் முதுநிலை ஆசிரியராக இருந்து தற்போது 5 ஆண்டுகளாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்காக நினைவாற்றல் பயிற்சியளித்து வரும் ஜான் லூயிஸ் நான்கு முறை உலக நினைவாற்றல் விருதை வென்ற ஒரே இந்தியர். நினைவாற்றலை உரசிச் செல்லும் ரூபக் க்யூப் போட்டியில் ஐந்து முறை உலக சம்பியன் பட்டம் வென்றவர். அடிப்படையில் ஆசிரியர் என்பதால் தனது அனுபவத்தை ஒட்டிய அற்புதமான நினைவாற்றல் உத்திகளை உதிர்க்கிறார். படிப்பது படித்தவற்றை மனதில் இருத்துவதே பரீட்சைக்காக மீண்டும் நினைவு கூர்வது… இதுதான் நினைவாற்றலை வலுப்படுத்தும் மூன்று முக்கிய நிலைகள். இதில் சில அடிப்படைகளை புரிந்து கொண்டால் நினைவாற்றல் கலை என்பது சுலபமாவதோடு சுவாரசியமாகவும் கைவந்த விடும். படிப்பதற்கு முன்பாக, படிக்கும் போது, படித்த பிறகு என மூன்று கட்ங்களாக இவற்றை பார்க்கலாம்.

படிப்பதற்கு முன்பாக …!

படிக்க அமர்வதற்கு முன்பாக முதலில் மனதளவில் தயாராக வேண்டும். அந்த தயார்படுத்தல் சுய ஆர்வத்துடன் நிகழ வேண்டும். மேற்படிப்பாக எதைப் படிக்கப் போகிறோம், படித்து என்ன வேலைக்கு செல்லப் போகிறோம், எந்த மாதிரியான சாதனைகளை செய்யப் போகிறோம், எவ்வளவு வசதி வாய்ப்புக்களுடன் நலமாக வாழப்போகிறோம் என ஏற்கனவே கற்பனை செய்திருப்பவற்றை, சில வினாடிகள் நினைத்துப் பார்ப்பது, அதற்கு உதவும். இவற்றை ஒரு சந்தோச சபதமாக மனதிற்குள் அல்லது கண்ணாடி முன்பாக சொல்லி விட்டு படிக்க அமரலாம்.

வீட்டில் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பது நல்லது. அந்த இடம் போதுமான காற்றோட்டம் பெற்றிருப்பதோடு டி.வி, வாகன இரைச்சல் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பாடம் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மூளையின் ஒட்சிசன் பற்றாக்குறைக்கு அத்தியாவசியமானது தண்ணீர் என்பதால் தண்ணீரும் உடன் இருக்கட்டும்.

சற்று முன்பாகத்தான் டி,வி, அரட்டை போன்றவற்றிலிருந்து திரும்பி இருப்பின் கவனத்தை ஒருமுகம் செய்ய புதிர்களைத் தீர்ப்பது, சுடோகு போன்றவற்றில் இரண்டொரு நிமிடங்களை செலவு செய்யலாம்.

படிப்பதற்கான நேரம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப காலை, மாலை, இரவு என அமையலாம். ஆனால் தினசரி அதே நேரத்தில் படிப்பது நல்லது. 50 நிமிடங்கள் படிப்பதை மட்டுமே மூளை தொடர்ந்து கிரகிக்கும். அதற்கேற்றவாறு பாட அளவை திட்டமிட்டு படிக்க வேண்டும்.

படிக்கும் போது…!

முதன் முறையாக ஒரு பாடத்தைப் படிக்கிறோம் என்றால், கவனம் அவசியம். வகுப்பில் நடந்த பாடத்தை அல்லது செய்முறையை மனதில் ஒரு முறை படரவிட்டு, கையில் பென்சிலுடன் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டவாறே வாசிப்பதை தொடர வேண்டும். இரண்டாம் முறை படிக்கும் போதும் அடிக்கோடிட்ட முக்கிய வார்த்தைகளை மட்டும் ஒன்றுக்கொன்று வரிசையாக தொடர்புபடுத்தி மனதிற்குள் இருத்திக் கொள்ள வேண்டும்.

படிப்பது என்றாலே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சகல தரப்பினரும் நினைப்பது, மனப்பாடம் செய்வதைத்தான். ஆனால் அடிப்படைக் கூறுகள் தவிர்த்து மற்றவற்றை மொட்டையாக மனப்பாடம் செய்தால்… அவை மனதில் தாங்காது. பாடத்தைப் புரிந்து கொண்டு, உணர்ந்து, காட்ச்சிப்படுத்தி, அவற்றின் பொருளோடு படிக்கும் போதுதான் அவை மனதில் தங்கும். அதாவது மனப்பாடம் செய்யாதீர்கள்… மனப்படம் செய்யுங்கள்!

காட்ச்சிப்படுத்துதல் என்பது எளிமையாகவும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு அந்தமான் நிக்கோபர் என்பதை அந்தமான் நிக்குது பார் என்றும், எத்தியோப்பியாவை எத்தி உதைப்பயா என்சைக்லோபீடியாவை என் சைக்கிளை பிடியா என்றும் ஆரம்பித்து அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும் பெயர் சொற்களுக்கும் கூட அர்த்தமுள்ள வசனங்களை பயன்படுத்தலாம்.

இவற்றை காட்சிப்படுத்திக் கொள்வதும் அவசியம். இதற்கு இரண்டு வழிகள் உதவும். முதலாவது PLAYV (Picture, Location, Association, funnY, Visualisation) அதாவது, பாடத்தைக், அது தொடர்பாக மனதில் தோன்றும் படத்தை, அடுத்தடுத்த கருத்துக்களை ஒன்றோடு ஒன்றாக தொடர்புபடுத்தி வேடிக்கையாக காட்சிப்படுத்தி கொள்வது. இதை சுவாரசியமாக, கார்ட்டூன் உத்தி உதவும். எதையும் மிகப்படுத்தி பிரமாண்டமாகவும் வண்ணங்களோடும், கவர்ச்சிகரமாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். இது பொதுவான வாசிப்புக்கு உதவும்.

கடினமான புதிய வார்த்தைகளை மனதில் இருத்த AMPM(Alternative, Meaningful, Personalize, Mental Picture) மெதேட் கைகொடுக்கும். அதாவது பாடத்திலிருந்து மாறுபட்ட அதேசமயம் அர்த்தமுள்ள, தனிப்பட்ட விதத்தில் மனப்பாடமாக இருத்திக்கொள்ளுதல், உதாரணத்துக்கு ப்யூஜியாமா (Fujiama) என்ற மிகப்பெரும் எரிமலையின் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ள எங்கள் உறவினரான பி ஜி என்ற பெண்மணி, ஒரு எரிமலை மீது நின்று கொண்டிருப்பதைப் போல கற்பனை செய்து கொண்டான் என் மகன். இதையே இன்னொரு மாணவன். தனக்குப் பிடித்த உடையான பைஜாமா அணிந்துகொண்டு, அவனே எரிமலை அருகில் நிற்பதாக கற்பனை செய்து, அந்த வார்த்தையை மனதில் பதிய வைத்துக்கொண்டான்.

கற்பனை, காட்சிப்படுத்தல் எதுவானாலும் அதில் ஒரு தொடர்பு இருப்பின் அது நினைவுப் பெட்டகத்திலிருந்து எளிதில் அழியாது.

அடுத்ததாக, மனித கண்ணின் தொடர்ச்சியான உழைப்புக்கு ஒரு சமயத்தில் 40 நிமிட படிப்புக்கு பிறகு, 20 விநாடிகள் இடைவெளி விட்டு, அந்நேரத்தில் 20 மீட்டர் தொலைவிலிருந்து ஏதேனும் பசுமையான இயற்கையான விஷயங்களின் மீது பார்வையை விடுங்கள். பாடத்துக்குத் திரும்பலாம். இப்போது 20 நிமிடங்கள் படித்ததன் குறிப்புக்களை இரண்டு நிமிடங்களில் திரும்பிப் பார்த்துவிட்டு அடுத்த 40 நிமிட அமர்வுக்கு முன்பாக 10 நிமிட இடைவேளை அவசியம். ஆக, இப்படியான இடைவெளிகள் ஒரு மணிக்கு ஒருமுறை என்பதாக அமைந்துவிடும்.

படித்த பிறகு….!

எவ்வளவு படித்தாலும் அவை மூளையின் நிரந்தரப் பதிவாக மாற, ரிவிஷனில் இருக்கிறது சூட்சுமம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, படித்த பாடம் அடுத்த 24 மணி நேரத்தில் 40% மறதிக்குள்ளாகிறது. இப்படியே விட்டால். 21 நாட்களில் குறிப்பிட்ட பாடத்தை படித்ததற்கான சுவடே இருக்காது. எனவேதான் நம்முடைய பாரம்பரியத்தில் ஒரு பழக்கத்தை வழக்கமாக மாற்றிக் கொள்ள, 21 நாள் பயிற்சி மேற்கொள்ளலை வைத்திருக்கிறார்கள்.

ரிவிஷனில் இந்த 4 நிலைகளைப் பின்பற்றுங்கள். முதல்நாள், 3 வது நாள், 7 வது நாள், 30 வது நாள் என்ற கணக்கில் ஆங்கிலம், அறிவியல் என ஒவ்வொரு பாடத்தையும் தினசரி நான்கு விதமாக திருப்பிப் பார்க்க வேண்டும். தினசரி வீட்டுப்பாடம், இவற்றுக்கான நேரமே தடுமாற்றமாகும்போது தினசரி நான்கு ரிவிஷன்கள் மேலும் குறைவான நிமிடங்களில் முடிந்துவிடும். மேலும் இந்த ரிவிஷனை கடினமாக பாடங்களை முதல்முறை படிக்கும்போது இடையிடையே மேற்கொள்ளலாம் அல்லது தூங்குவதற்கு முன்பாகவே பயணத்தின்போதே, காத்திருப்பின்போதோ கூட மேற்கொள்ளலாம். சிலர் எதற்கெடுத்தாலும் எழுதிப் பார்ப்பார்கள். இது ரிவிஷனுக்கான நேரத்தைச் செரித்துவிடும். எட்டாம் வகுப்புக்கு மேல் கடினமான பாடப் பகுதிகளை மட்டுமே எழுதிப் பார்த்தால் போதுமானது.

ஆயத்தம், படித்தல், திருப்பிப் பார்த்தல் இவற்றோடு ….. பரீட்சை தினத்தையும் அவ்வப்போது மனச்சாட்சியில் வெற்றிகரமாக பலமுறை மனத்திரையில் ஓடிப்பார்ப்பது நல்லது. இது கடைசி நேர தடுமாற்றங்களை தவிர்க்கச் செய்யும்.

இதை தவிர்த்து அத்தியாவசிய தூக்கம், உணவு, ஓய்வுக்கு உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தினசரி குறைந்தது 2 லீற்றர் தண்ணீர்….. இவற்றையும் மறந்துவிட வேண்டாம்.

Leave a Comment