FWC

குழந்தையின் கல்வி வளர்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

குழந்தைகளின் கல்வி வளர்சியில் பரம்பரையும் சுழலும் பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் கருவாக உருவாகும் போது, வேறுபாடுகள் தோன்றுகின்றன. வேறுபாடுகள் தோன்றுவதற்கு பரம்பரையும் சுழலும் காரணமாக அமைகின்றன. இதில் எது கூடுதலாக செல்வாக்கு செலுத்துகின்றது என்பது தொடர்பான அறிஞர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. மனிதனுடைய உடல், உள, மனவெழுச்சி வளர்ச்சிக்கு பரம்பரை அலகுகளை சூழல் இயல்புகளும் காரணமாக அமைகின்றன.
குழந்தையின் வளர்சியின் வேகம், தன்மை அளவு ஆகிய இயல்புகளின் மரபுநிலை(Heredity),சூழல் (Environment) இரண்டும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவ் இரு காரணிகளும் குழந்தையின் கல்வி வளர்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

குழந்தையின் கல்வி வளர்சியில் பரம்பரையின் பங்களிப்பு

மரபு நிலையின் செல்வாக்கினால் தான் பிறக்கும் குழந்தைகள் பெற்றோரின் சாயலை ஒத்திருக்கின்றனர். கருவுற்ற முட்டையில் ஒடுங்கி நிற்கும் எல்லாப் பண்புக் கூறுகளையும் குறிப்பது மரபு நிலை. தன் பெற்றோர், முன்னோர்களிடம் இருந்து பிறப்பிலேயே ஒரு குழந்தை பெறும் உடல்கூறுககளும் மனத்திறன்களும், மனவெழுச்சிக்கூறுகளும் அதன் பரம்பரை அல்லது மரபு நிலையால் வந்தவை எனவும் இது உயிரியல் மரபு எனவும் அழைக்கப்படுகின்றது.
ஒரு குழந்தையினுடைய மரபு நிலைப் பண்புகள் அதன் பெற்றோரிடம் மட்டுமன்றி அதன் முன்னோர்களிடம் இருந்தும் வந்திருக்கலாம். இதனால் தான் சில குழந்தைகள் தாய் தந்தையின் சாயல் இல்லாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன. குழந்தைகளின் கல்வி வளர்சியில் ஆசிரியர்கள் அவர்களுடைய மரபு நிலையை மாற்ற முடியாது. குழந்தையின் பிற்கால வாழ்க்கையும் ஆளுமையும் அது பிறந்த பின்னரோ அல்லது வளர்ந்த பின்னரோ மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. கருவாக இருக்கும் போதே இவற்றில் பல தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. தாய், தந்தையினுடைய பண்புகள் குழந்தையினுடைய உருவாக்கத்தில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. பிறக்கும் குழந்தை என்னென்ன பண்புகளோடு வளரும் என்பதை பரம்பரையின் மரபு நிலைகள் நிர்ணயித்து விடுகின்றன.
குழந்தை கருவாக இருக்கும்போது தாய், தந்தையின் உடல் சார்ந்த அம்சங்கள் கூடுதலாக பரம்பரை அலகினால் தீர்மானிக்கபடுகின்றன. ஒரு குழந்தையினுடைய அறிவு, திறன்கள் பரம்பரையின் தாக்கத்தில் தங்கியுள்ளன. இவர்களின் கல்வி வளர்சிக்கு பரம்பரை செல்வாக்குச் செலுத்துகின்றது. பிரான்ஸிஸ் காலடன், கால் பியர்சன் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளின் படி மனிதன் ஒருவன் பெற்றுள்ள அறிவுத் திறனின் அளவு அவனது மரபு நிலை செல்வாக்குச் செலுத்துவதை வலியுறுத்துவதாக அமைகின்றது.
ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளின்படி ஒரு குழந்தையின் கல்வி வளர்சியில் குழந்தையின் அறிவுத்திறன்கள், நுண்ணறிவு, ஆளுமை ஆகியவற்றிலே பரம்பரையின் பங்களிப்பு அதிக செல்வாக்கு செலுத்துவதை அறியமுடிகின்றது.

குடும்ப சூழ்நிலை

ஒரு குழந்தையின் ஆரோக்கியம், மகிழ்சிகரமான வளர்ச்சி என்பவற்றுக்கு குடும்பம் என்ற அமைப்பை அடித்தளம், ஆரோக்கியமான குடும்ப சூழலில் வாழும் பிள்ளை உடல், உள நலத்துடன் வளரும். அமைதியான நல்ல குடும்ப சூழலில்  அன்பு, ஆதரவு, அரவணைப்பு மேலோங்கிக் காணப்படும். அத்துடன் கீழ்ப்படிவு, புரிந்துணர்வு, மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்க கூடியதாக அமையும்.
இவ்வாறான தன்மை குழந்தையின் கல்வி வளர்சியில் ஆரம்ப அடித்தளமாக விளங்குகின்றது. ஆரோக்கியமான குடும்பங்கள் கல்வியில் உயர வேண்டும் என்ற எண்ணம், இலக்கு இருக்கும். அதற்காக தமக்குள் சில கட்டுப்பாட்டுகளையும் ஒழுங்கு விதிகளையும் தியாகங்களையும் கொண்டிருப்பர். சிறப்பார்ந்த குடும்பச் சூழலிலே குழந்தைகள் மொழிப்பிரயோகம், சுத்தம், உரையாடல், நல்ல பழக்கவழக்கங்கள், நல்ல நடத்தை போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். அன்பை வெளிக்காட்டல், உற்சாகமளித்தல், உடல் நலத்தில் கவனமெடுத்தல், அறநெறி ஒழுக்க விழுமியங்கள், இறையுணர்வு போன்ற விடயங்களையும் குடும்பச் சூழலில் இருந்து குழந்தை கற்றுக்கொள்கிறது.
குழந்தை உளவியலாளர்களின் ஆய்வு முறைகளின் படி குழந்தையின் அறிகையாற்றல் வளர்சியில் தந்தை, தாயின் கல்வி, குடும்ப உறுப்பினர்களின் கல்வி, கல்விசார் ஊக்குவிப்புக்கள், குடும்பத்தின் சமூக பொருளாதார கட்டுமானம் போன்றவை நேரடியாக செல்வாக்குச் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பச் சூழலில் வளரும் குழந்தையின் கல்வி வளர்ச்சி மேலும் ஊக்குவிக்கப்படுகின்றது. அன்பு, ஆதரவு, அரவணைப்பு அற்ற சூழலிலும் சிதைந்த குடும்பங்களிலும் வாழ்ந்த சிறுவர்களின் கல்வி அடைவுகளும், நுண்மதித் திறனும் பாதிப்படைவதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அவ்வாறே வறுமையில் உச்சம், அதீத குழப்பமுள்ள பெற்றோர் வாழும் சூழல் போன்றவற்றைப் பின்புலமாகக் கொண்ட சிறுவர்களின் அடைவுகளும் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கற்றலுக்கு மிகப் பிரதானமானது மொழி. அந்த மொழியாற்றலை வளர்க்கும் ஆரம்ப இடம் குடும்பச்சூழல் நல்ல மொழியாற்றலை, மொழித்திறன் விருத்தியைப் பெற்ற குழந்தைகள் கல்வியில் சிறப்பாக கல்வி அடைவைப் பெற முடிகின்றது. எனவே சூடும்பச் சூழல் பிள்ளையின் கற்றற் செயற்பாட்டுக்கு உந்து சக்தியாக அமைகின்றமை நோக்க முடிகின்றது.

பாடசாலைச் சூழல்

குழந்தையின் கற்றற் செயற்பாடுகளிலும் விழுமியச் செயற்பாடுகளிலும் பாடசாலையின் பௌதீகச் சூழல் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. பௌதீகச் சூழல் எனும் போது பாடசாலைக் கட்டிடங்கள், வகுப்பறைகள், பிள்ளைகளுக்கு வசதியாகவும் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.குழந்தைகளின் கல்வி வளர்சியில் பாடசாலைத் தளபாடங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. மாணவரது வயது, வளர்சிக்கு ஏற்ப கதிரை, மேசை ஏனைய தளபாடங்களும் கல்வி வளர்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
பாடசாலையின் உயிரியல் சூழலில் பூங்கா. நிழல் தரும் மரங்கள், குழந்தைகளின் கல்விச் செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய பூங்கா, தோட்டம் மரநிழல் போன்றன குழந்தைகளின் உள்ளங்களை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. குழந்தைகளின் உள்ளங்களை புத்துணர்ச்சி பெறச் செய்கின்றன. குழந்தைகளின் உடலும் உள்ளமும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இவ்வாறான சூழல் குழந்தையின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும்.
குழந்தைகள் உடல் – உள ஆரோக்கியத்தை பேணுவதில் பாடசாலை மைதானமும் பங்களிப்பு செய்கின்றது. குழந்தைகள் சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்புகள், வசதிகள் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் கற்றல் ஊக்கம் பெறவும் திறன்களை வெளிப்படுத்தவும் சந்தர்ப்பமளிக்கின்றது. விளையாட்டுகள் ஊடக குழந்தைகள் அற ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், பால் வேறுபாடு போன்றவற்றைக் கற்பதற்கு பாடசாலை விளையாட்டுகள் துணை செய்கின்றன. குழந்தைக்கு பாடசாலைச் சூழலை சிறப்பாக அமைப்பதன் மூலம் பரம்பரையில் ஏற்படுகின்ற சில குறைபாடுகளைக் கூட நிவர்த்தியாக்க முடிகின்றது. குழந்தையின் நுண்மதியாற்றல் பரம்பரையில் மட்டுமல்லாமல் சூழலிலும் பெரும் பங்கு தங்கியுள்ளது. குழந்தைகளின் ஆற்றல்கள், நல்ல பண்புகள் சிறப்பாக வளர்ச்சி பெறக்கூடிய கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. பாடசாலைச் சுழலானது சிறப்பாக அமைகின்ற போது குழந்தைகள் மிக விருப்புடன் கற்கும் திறன் அதிகரிக்கின்றது. பாடசாலைச் சூழல் குழந்தைகள் கல்வி கற்பதற்குப் பொருத்தமாக, அழகாக, கவர்ச்சியாக அமைகின்ற போது பிள்ளைகள் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் கல்வி கற்க வருகின்றனர். இதனால் அவர்களின் கற்றல் வளர்ச்சி ஏற்படுகின்றது.
குழந்தைகளின் ஆரம்ப சூழலில் குடும்பத்திற்கு அடுத்த படியாக விளங்குவது முன்பள்ளிகள், முன்பள்ளிக் குழந்தைககளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. முன்பள்ளிக் குழந்தைகள் தொழிற்படுவதற்கான தயார் நிலை, கற்பதற்கான தயார்நிலை, தொழிற்பாடுகளிலே பங்குபற்றல் என்பன குழந்தைகள் வாழும் குடும்பச் சூழல், வாழும் அயற் சூழல், பொருளாதார நிலை என்பவற்றுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளன. முன்பள்ளிக் கல்வியானது குழந்தைகளிடம் தன்னம்பிக்கை, தற்துணிவு, தொடங்கும் ஆற்றல், வெட்கமற்ற சுயவெளிப்பது என்பவற்றை வளர்கின்றன.
அந்த வகையில் குழந்தையின் கல்வி வளர்சியில் பாடசாலைச் சுழலின்பங்கு மிக முக்கியமானதாகும். எந்த ஒரு குழந்தையும் எப்படியான பரம்பரையில் இருந்து வந்ததாயினும் குழந்தை உயர்வான நற்பண்புகளையும் ஒழுக்க விழுமியங்களையும் கீழ்ப்படிவுகளையும் வெளிப்படுத்தும் இடம் பாடசாலைச் சூழல் ஆகும். சிறந்த கல்விமுறை, கற்பித்தல் செயற்பாடுகள் நல்ல முறையில் நடைபெற அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது அதிபர், ஆசிரியர் பணியாகும்.

முடிவுரை

குழந்தையின் கல்வி வளர்சியில் பரம்பரை, சூழல் இரண்டுமே பங்களிப்புச் செய்கின்றன. குழந்தையின் வளச்சியானது பரம்பரை, சூழல் இரண்டினதும் இடைவினையால் எழுவதாகும். உடற் பண்புகள், அறிவுசார் பண்புகளின் பரம்பரைச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. குழந்தையின் பரம்பரையின் உயிரியல் மரபில் இருந்து பெறும் பண்புகள் சிறப்பாகச் செய்வதற்க்கு பாடசாலைச் சூழல், சமூகச் சூழல் மூலம் கிடைக்கும் நுண்மதியும் வேண்டப்படும் ஒன்றாகும். எனவே குழந்தையினுடைய  கல்வி வளர்சிக்கு பரம்பரை இயல்புகளும் சூழல் இயல்புகளும் இணைந்து செயற்படுகின்றன. எனவே குழந்தையின் கல்வி வளர்சிக்கு பரம்பரை சூழல் இரண்டினது பங்களிப்பு நிறைவாக செல்வாக்குச் செலுத்துகின்றமை தெளிவாகும்.

Leave a Comment