FWC

கல்விப் புரட்சியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் வட மாகாண சமூகம்

தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள், க.பொ.த (சா/த) பெறுபேறுகள், க.பொ.த (உ/த) பெறுபேறுகள் என்பவற்றில் எமது மாகாணம் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலாவது கல்வி அபிவிருத்திக்காக ஒரு கல்விப் புரட்சியை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையும், கட்டாயமும் ஆகும். வட மாகாணத்தில் மறுமலர்ச்சியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்பது மட்டும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

எமது மாகாணம் ஏனைய மாகாணங்களோடு போட்டிபோட தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வட மாகாணத்திற்கு இதற்கென ஒரு விசேட கல்வி அபிவிருத்திக் குழு முறையாக உருவாக்கப்பட வேண்டும். கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்தி விடயங்களை முன்னெடுக்க வேண்டும். இதனோடு பல அமைப்புகளும், சங்கங்களும், கழகங்களும் கைகோர்க்க வேண்டும்.

இனிமேலும் தாமதிக்காது வடக்கு அரசியற் கட்சிகள் தமக்கு கிடைக்கின்ற நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை பேதங்களை பார்க்காது வட மாகாணக் கல்வி வளர்ச்சிக்காக  ஒதுக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக உதவி செய்கின்ற ஏனைய சமூகத்தினரும் ஒன்றிணைய வேண்டும்.

இதன் மூலமாக ஒரு புதிய வேலைத்திட்டத்தை  ஏற்படுத்தி வடக்கில் ஒரு கல்வி மறுமலர்ச்சியை – புரட்சியை ஏற்படுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டை வட மாகாணத்தின் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தி ஒரு விசேட வேலைத்திட்டத்தை அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

வடக்குக்கு இருக்கின்ற ஒரேயொரு முதலீடு கல்வி என்பதை உணர்ந்து அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியினை முறையாகவும், பொருத்தமானதாகவும் செலவு செய்ய வேண்டும்.திருப்பி அனுப்ப வேண்டாம். சென்ற முறை கூட கணிசமான வீதம் பாவிக்கப்படாது திருப்பப்பட்டது வேதனை தரும் விடயமாகும். நன்கு திட்டமிட்டு செயற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஒரு பொது தகவல் மையம் – வள நிலையம் ஒன்றை உருவாக்கி மாணவர் எண்ணிக்கை, பாட ரீதியான ஆசிரியர் விபரம், பற்றாக்குறையான ஆசிரியர் விபரம், பாடசாலை செல்லாத மாணவர்கள், தவணை, பொதுப் பரீட்சைப் புள்ளிப் பகுப்பாய்வு பதிவுகளைச் செய்து இவ்விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வரவேண்டும்.

சகல துறை சார்ந்த அதிகாரிகளும் கல்விசார் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். இவ்வருட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சகல குழுக்களும் கல்வி அபிவிருத்திக்குப் போட்டி போட்டுக்கொண்டு முன்வர வேண்டும். ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் வழிகாட்டல், ஆலோசனைகளைப் பெற்று முன்னோடி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

வட மாகாண கல்விச் சமூகத்தின் விடியலுக்காக நாம் செயற்பட வேண்டும். தகுதியான பிரதிநிதிகள், ஆலோசகர்களை தெரிவு செய்து அதன் மூலம்  தரவுகள் பெறப்பட்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தரம் – 5, 11, 13 மாணவர்களின் பெறுபேற்று அடைவுகள் பற்றி கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இனி வரும் காலங்களில் எமது சமூக மாணவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். எனவே, சமூகத்தின் விடியலுக்கு கல்வி வளர்ச்சி முக்கியம். கல்வியில், பெறுபேற்றில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல உடனடி நடவடிக்கைகளை எம்மவர்கள் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். வளங்களை ஒட்டுமொத்த வளர்சிக்காகப் பயன்படுத்துவதில் அசுர வேகத்துடன் செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

என்னதான் சில விடயங்கள் தடையாக இருந்தாலும், நல்ல செயற்றிட்டங்கள், நல்ல கொள்ளைகள், நேர்மையான செயற்பாடுகள் அனைத்துமே நிச்சயம் தடைகளை தகர்க்கும் ; வட மாகாணக் கல்வி வளர்ச்சி, பெறுபேற்று உயர்ச்சி நிலைத்து நிற்கும்.

Leave a Comment