FWC

கற்றல் செயற்பாட்டில் முக்கிய பங்காற்றும் ”ஞாபகசக்தி”

வாழ்க்கையிலோ அல்லது பரீட்சையிலோ நாம் வெற்றிபெறுவது என்பது சரியான தகவலை அல்லது செயன்முறையை சரியான வேளையில், சரியான முறையில் பயன்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

தகவல்களை அல்லது ஆற்றல்களை கருவறையில் தொடங்கி கல்லறைக்குச் செல்லும் வரை கற்றுக் கொண்டேயிருக்கின்றோம். சூழல் பாடவிதானம், ஊடகங்கள் மற்றும் அனுபவங்கள் என்பவற்றிலிருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றோம். இயற்கை அல்லது இறைவனால் சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் சமமாக வழங்கப்படுகின்றபோதும், ஒரு சிலரே வாழ்க்கையில் அல்லது பரீடசையில் வெற்றிபெற ஏனையோர் பின்தங்குகின்றோம்.

நாமும் அந்த ஒரு சிலர் வரிசையில் இடம்பிடிப்பது எவ்வாறு? என்பதே எம்முன் எழுந்து நிற்கும் மாபெரும் வினாவாகும்.

இத்தைகைய வெற்றியில் பாரிய பங்களிப்புச் செய்வது எமது ஞாபகசக்தியே ஆகும். எனவே ஞாபகசக்தி என்றால் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகின்றது? அதனை எவ்வாறு நாம் விருத்தி செய்யலாம் எனச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

தகவல்களை, ஆற்றல்களை அல்லது அனுபவங்களை பெற்று சேமித்து வைத்து மீளப் பயன்படுத்தும் ஆற்றலையே ஞாபகசக்தி எனலாம்.

ஞாபக சக்திக்கு பொறுப்பாக விளங்கும் எமது உடலின் பிரதான பகுதி மூளையாகும். கோடிக்கணக்கான நரம்புகளைக் (neurons) கொண்டு ஆக்கப்பட்டதே இம் மூளையாகும்.  இந்நரம்புகள் நரம்பிணைப்புக்களின் (synapses)  மூலமாக ஏனைய நரம்புகளுடன் தொடர்புகொள்கின்றன.

ஞாபகசக்திக்கு பொறுப்பான நரம்புகள் தமக்கிடையே புதிய நரம்பிணைப்புக்களை தோற்றுவிப்பதன் மூலம் ஞாபகசக்தியானது உருவாகின்றது.

ஞாபகசக்தியை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  1. புலன் ஞாபகம் (sensory memory)
  2. குறுகிய தொழிற்பாடு ஞாபகம் (short term/ working memory)
  3. நீண்டகால ஞாபகம் (long term memory)

புலன் ஞாபகம் (Sensory memory)

ஐம்புலன்களின் ஊடாக நாம் தகவல்களை பெற்றுக்கொள்கின்றோம். பெரும்பாலும் கண் (பார்த்தல்), காது (கேட்டல்) மூலமாகவே தகவல்கள் எம்மை வந்தடைகின்றன. பார்த்த காட்சியிலிருந்து கண்ணோ அல்லது கேட்ட ஒலியிலிருந்து காதோ அகற்றப்பட்ட பின்னரும் அக்காட்சி அல்லது ஒலி ஞாபகத்திலிருத்தலையே புலன் ஞாபகம் என்பர்.

விசைப்பலகையால்(keyboard) கணனியின் மத்திய செயற்பாடுப் பகுதிக்குத்(central processing unit) தகவல்கள் அனுப்பப்படுவதை இதற்கு ஒப்பிடலாம்.

ஒரு சில செக்கன்களே இந்த ஞாபகம் நீடிக்கும். எத்தனையோ காட்சிகளும் ஒலிகளும் எம்மைச் சூழ எழுந்தாலும் எம்மைக் கவர்பவையே நாம் பார்க்கின்றோம் அல்லது கேட்கின்றோம். அதாவது கவனிக்கின்றோம் (attention). ஏனையவை கவனிக்கப்படாமலேயே சென்றுவிடுகின்றன. எவ்வளவுதான் நாம் கூர்ந்து கவனித்தாலும் 11 நிமிடங்களுக்கொரு தடவை எமது கவனம் கலைகிறது.

மேலும் பொதுவாக 35 – 40 நிமிடங்களுக்கு மேல் மூளையினால் களைப்படையாது மிக உச்ச அளவில் தொடர்ந்து ஒரு விடயத்தில் அக்கறைகொள்ள முடிவதில்லை. பாடசாலைகளில் இவற்றைக் கருத்தில் கொண்டே பாடவேளைகள் தயாரிக்கப்படுகின்றன.

நாமும் சுயமாக கற்கின்றபோது இதனைக் கருத்திற்கொண்டு தொடர்ச்சியாக சிலமணி நேரம் கற்கின்றபோது சிறுசிறு இடைவேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேவேளை கற்பதனை மறந்து இடைவேளையுடன் கலந்து விடக்கூடாது. அத்துடன் கூர்ந்து கவனிக்க முடியாமற் போவதற்கு நாம் ஒரே வேளையில் பல இலக்குகள் (multi task) பற்றிச் சிந்திப்பதும் ஒரு காரணமாகும். இவ்வாறு நடப்பதால் ஒரு இலக்கினையுமே பூரணமாக அடைய முடிவதில்லை.

இதனைச் தவிர்ப்பதற்கு இந்தத் தேவைப்படும் அந்தந்த கணப்பொழுதுகளில் வாழப் பழகிக்கொள்ள (living in the moment) வேண்டும். கடந்துபோன கசப்பான காலங்களை எண்ணி வருந்துவதிலேயே எதிர்காலம் பற்றிய பயம் மற்றும் பதகளிப்பில் காலத்தைக் கடத்துவதிலோ பயனில்லை. நிகழ்காலமே நிஜம் என்பதை உணர வேண்டும். அதனை உச்சமாக பயன்படுத்த வேண்டும். இந்தப் புலன் ஞாபகத்தில் உள்ளெடுக்கப்படும் தகவல்கள் அடுத்த கட்டமான குறுகிய தொழிற்பாடு ஞாபகத்தினுள் நுழைகின்றன.

குறுகிய தொழிற்பாடு ஞாபகம் (Short term / working memory)

இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்ற தகவலை எமக்குச் சொல்வது குறுகிய தொழிற்பாடு ஞாபகம் ஆகும். எமது அன்றாட நடவடிக்கைகள் இந்த ஞாபகத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

புலன் ஞாபகத்தினதும் நீண்டகால ஞாபகத்தினதும் பாலமாகத் தொழிற்படுவது இதுவே. இதனாலேயே இதனைத் தொழிற்படு ஞாபகம் என்பர். சிந்தனை அல்லது கற்பனை செய்தல், கணித சமன்பாட்டினைத் தீர்த்தல், குறுக்கெழுத்துப் புதிரை நிரப்புதல், பரீட்சை எழுதுதல், நடன அளிக்கை செய்தல் போன்ற நிலைமைகளிற் தூண்டல்களிற்கேற்ப தேவையான தகவல்களை நீண்டகால ஞாபகத்திலிருந்து பெற்று நாம் தொழிற்பட உதவுவதே இந்த ஞாபகமாகும்.

எனவே இந்த ஞாபகத்தினை கணினியில் ”RAM” தொழிற்பாட்டிற்கு ஒப்பிடலாம். ஒரு சில செக்கன்களிலிருந்து ஒரு சிலமணி நேரம் வரை இது நீடிக்கலாம். மீட்டல் (Rehearsal) மூலம் இந்தக் கால அளவினைக் கூட்டிக்கொள்ளலாம்.

இதனது கொள்ளளவானது (capacity) மிகவும் குறைவானது. ஒரே நேரத்தில் 7 – 2 வித்தியாசமான தகவல்களை எம்மால் கையாள முடியும். இவ்வாறு ஒரே நேரத்தில் பல விடயங்களைச் சரியாகச் செய்பவர்களையே தசாவதானி, அட்டாவதானி என்போம்.

தகவல்கள் எந்தளவு பெரிதாகவோ சிக்கலானதாகவோ இருந்தபோதிலும், அதனை 7 – 2 அர்த்தமுள்ள துண்டுகளாக்கும் போது (meaningful chunks) எம்மால் அதனைக் கையாள முடியும்.

உ -ம் : ROWCIDKGBCIAFBI என்பதைப் பின்வருமாறு ஞாபகத்தில் வைத்திருக்கலாம். ROW-CID-KGB-CIA-FBI அர்த்தமுள்ள 5 துண்டுகளாக்கப்பட்டுள்ளது.

0122222073 என்ற தொலைபேசி இலக்கத்தினை 021, 222, 2073 என்றவாறு ஞாபகம் வைத்திருத்தல் வேண்டும். புறக் குழப்பங்களால் (Disturbances) இந்த ஞாபகசக்தி பாதிக்கப்படுகின்றது. எவரொருவர் அதிக தகவல்களை அதிக நேரம் தொழிற்பாடு ஞாபகத்தில் வைத்திருக்கின்றாரோ அவரே வெற்றிபெற்றவராவார். இந்தக் குறுகிய தொழிற்பாடு ஞாபகத்தில் தகவல்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்ற போது (Repetition) அவை நீண்டகால ஞாபகத்திற்குச் செல்கின்றன.

நீண்டகால ஞாபகம் (Long term memory)

கணனியின் ”Hard Disc” ற்கு ஒப்பிடக்கூடியது. நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடியது. கொள்ளளவில் எல்லையற்றது.

சீ.வீ.ராமன் ஜன்ஸ்டீன் போன்ற மேதைகளே நீண்டகால ஞாபகத்தின் 10-15% கொள்ளளவையே பாவித்துள்ளனர். தகவல்களை மீண்டும் மீண்டும் மீட்க்கின்றபோது (repetition)  நீண்டகால ஞாபகத்திற்குச் செல்கின்றன. அங்கே ஏற்கனவே உள்ள தகவல்களுடன் தொடர்புபட்டதாயின் (association) எமக்குத் தேவையென நாமாகத் தேடிப் பெற்ற தகவலாயினும் (self meterent) உணர்வு பூர்வமான தகவலாயினும் (emotional data) நீண்டநாள் ஞாபகத்தில் பதிதல் இலகுவாகின்றது.

மீண்டும் மீண்டும் பார்ப்பதும் கேட்பதும் எமது ஆழ்மனதிற் படிந்து நீண்டகால ஞாபகத்திற்குச் செல்லும் என்னும் தத்துவமே. விளம்பரங்களை மீண்டும் மீண்டும் ஒலி ஒளி பரப்புவதும், அடிக்கடி கண்ணுக்குப் புலப்படும் இடங்களில் ஒட்டுவதும் ஆகும். பத்திரிகைகளில் மீண்டும் மீண்டும் விளம்பரம் செய்வதும் ஆகும். அரசியலிலும் தேர்தல் காலங்களிலும் இவ்வுத்தியே பயன்படுகின்றது.

நீண்டநாள் ஞாபகம் சேமிக்கப்படும் பகுதி எமது ஆழ்மனதாகும் (subconscious mind). நீண்டநாள் ஞாபகம் பிரதானமாக இருவகைப்படும்.

  1. வெளிப்படையான ஞாபகசக்தி (Explicit Memory)
  2. உள்ளான ஞாபகசக்தி (Implicit Memory)

வெளிப்படையான ஞாபகசக்தி (Explicit Memory)

இதனையே பொதுவாக ”ஞாபகசக்தி ” என்கின்றோம். முயன்று ஞாபகத்திற்குக் கொண்டு வருதலைக் குறிக்கும். பெயர்கள், விபரங்கள், விடயங்கள், சம்பவங்கள் போன்றவற்றை (facts and figures) ஞாபகப்படுத்தலைக் குறிக்கும். இதனை மேலும் இரு வகையாகப் பிரிப்பர்.

  1. தகவல்கள் சம்பந்தமான ஞாபகம் (semantic Memory) – பெயர்கள், காரண காரியங்கள் போன்றவற்றை ஞாபகம் வைத்திருத்தல்.
  2. நிகழ்வுகள் சம்பந்தமான ஞாபகம் (Episodic Memory) – நிகழ்வுகளை ஞாபகம் வைத்தல் – உ-ம் : பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றமை.

உள்ளான ஞாபகசக்தி (Implicit Memory)

எம்மை அறியாமல் தொழிற்படும் ஞாபகசக்தி இதுவாகும். எமது ஆற்றல்களும் செயன்முறைகளும் இவ்வாறே பதிவாகின்றன.

உ-ம் : வாகனம் ஓட்டுதல், வாத்தியக் கருவிகளை இசைத்தல்.

நீண்டநாள் ஞாபகசக்தி மிகவும் அத்தியாவசியமானதாகும். தொழிற்படு ஞாபகமானது இதிலிருந்தே தகவல்களையும் பொறிமுறைகளையும் பெற்று எம்மைத் தொழிற்பட வைக்கிறது. எமது மூளை, காட்சிகள், படங்களாகவோ ஞாபகத்தைப் பேண விரும்புகின்றது.

ஒரு நபரை நினைத்துப் பாருங்கள். அவரது உருவம் உடனடியாகப் படமாக ஞாபகம் வரும். அவரது செயல்கள், குறிப்பிடத்தக்க இயல்பு யாவும் காட்சிகளாகத் தோன்றும். அதே போல ஒரு இலக்கத்தைப் நினைத்துப் பாருங்கள். அந்த இலக்கம் ஞாபகத்திற்கு வரும். எனவே முடிந்தளவு படங்களாகவும் காட்சிகளாகவும் தகவல்களை ஞாபகம் வைத்திருக்கப் பழக வேண்டும். இங்குதான் கட்புல செவிப்புல சாதனங்கள் உதவுகின்றன.

இது இவ்வாறிருக்க, எமது ஞாபகசக்தி தொழிற்படும் விதத்தை சுருக்கமாகப் பின்வருமாறு காட்டலாம். உறக்கத்தின் போதே ஞாபகசக்தியானது பலமடைகின்றது (Consolidation). நரம்புப் பிணைப்புக்கள் உறுதியும் பலமும் அடைகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் (deep sleep / Repid Eye Movement (REM) sleep) இவ்வாறு நிகழும் போதே கனவு தோன்றுவதாகக் கருதப்படுகின்றது.

நீண்டகால ஞாபகத்திலிருந்து சில தகவல்களை விரைவாகப் பெற்றிருப்போம். மீண்டும் மீண்டும் எம்மால் பயன்படுத்தப்படும் தகவல்கள் விரைவாகக் கிடைக்கும். நீண்டநாள் பாவிக்காது விட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள நீண்ட நேரம் எடுக்கும். ஞாபகத்திற்குக் கொண்டு வர முயன்ற பெயரோ சம்பவமோ நீண்ட நேர இடைவெளியில் திடீரென ஞாபகத்திற்கு வரும். அப்போது நாம் வேறொரு விடயத்தில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருப்போம். அதுவரை எம்மை அறியாது எமது மூளை அத்தகவலை நீண்ட நாள் ஞாபகத்தில் எங்காவது இருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருக்கும்.

ஞாபக மறதி (Forgetting)

பல தேவையற்ற பாதகமான விடயங்களை காலப்போக்கில் மறந்து போகும் வரம் இறைவனால் எமக்கு வழங்கப்பட்டதாலேயே நாம் நிம்மதியாக வாழ்கின்றோம். ஆனாலும் தேவையானதை மறந்து போதல் பாதகமானதே. இங்கு நோய்களால் ஏற்படும் ஞாபக மறதியை குறிப்பிடவில்லை.

குறிப்பாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவரிடையே மறதி பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று பார்ப்போம்.

நாம் கற்கும் பாடங்கள் மறந்து போகாமல் இருக்க எவ்வாறு மீட்டல் செய்ய வேண்டும் என நரம்பியல் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். நீண்ட கால ஆராய்ச்சிகளின் பின் ஆகக் குறைந்தது எவ்வளவு நாளுக்கொருதடவை எவ்வளவு நேரம் மீட்டல் செய்ய வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளனர். நாம் சராசரி மாணவர்களாயின் நாம் கற்ற பாடங்கள் 30 நிமிட நேரத்தில் 50 வீதம் மறக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் 40 வீதத்திற்கு மேல் குறைவடைந்து 24 மணிநேரத்தில் 20 வீதத்திலும் குறைவாகவே ஞாபகம் நிற்கும்.

இதனைத் தவிர்க்க 2ம்  நாள் 10 நிமிடமும் 7 ம் நாள் 5 நிமிடமும் 30 ம் நாள் 2-4 நிமிடமும் மீட்டால் கற்ற பாடங்களை மறக்காது ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். எனவே ஆரம்பத்தில் படிக்காது விட்டு கடைசி நேரத்தில் ஒரேயடியாக கற்பதில் பயனில்லை. கற்கின்ற போதே உடனே மீட்டு வந்தால் இறுதியில் வருந்தத் தேவையில்லை.

மேலும் ஆசிரியர்களும் இதனைக் கருத்திற் கொண்டு நேரசூசிகை தயாரித்தால் நன்றாக இருக்கும். கற்கின்ற முறை கவர்ச்சிகரமானதாக (கற்பித்தல் துணைச்சாதனப் பயன்பாடு) அமைகின்ற போதும் இது எமக்கு மிகவும் அவசியம் என மாணவர்கள் உணர்கின்ற போதும் கவனம் எடுக்கின்றனர். இதனால் புலன் ஞாபகம் உருவாகி இறுதியில் நீண்ட கால ஞாபக சக்தி கூடுகின்றது. கற்கும் சூழல் விரும்பத்தக்கதாக அமைத்தலும் அவசியம்.

குறுகிய தொழிற்படு ஞாபகத்தினை வளர்த்துக் கொள்ள மனப்படம் காணுதல் (visualization) அல்லது ஒத்திகை (rehearsal) மிக அவசியம். தகவல்களை அர்த்தமுள்ள  துண்டுகளாக்கி பழகுதல் வேண்டும். தகவல்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்த்தாலும் மிக இலகுவாக ஞாபக சக்தியை கூட்டிக் கொள்ளலாம்.

மாணவர்கள் இந்த ஞாபகசக்தியினை நம்பியே முதல் நாள் அல்லது காலையில் படித்து விட்டு பரீட்சை எழுதுகின்றனர். நீண்டகால ஞாபகசத்தியை வளர்க்க மீட்டலுடன் போதிய உறக்கம் அவசியம். அதிக நித்திரை விழித்தல் ஞாபகசக்தியை பாதிக்கும்.

ஆழ்ந்த உறக்கத்திலேயே தற்காலிக ஞாபகசக்தியிலிருந்து நிரந்தர ஞாபகத்திற்கு தகவல் இடம்மாற்றப்படுகின்றன. இதன் மூலம் தற்காலிக ஞாபகசக்தியினை சேகரித்து வைக்கும் மூளையின் பகுதியிலிருந்து தகவல் அகற்றப்பட அதன் கொள்ளளவு மீண்டும் பழைய நிலைக்கு அதிகரிக்கின்றது. இதனை ஒரு ”pendrive” ன் தகவல்களை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு மீண்டும் அப் ”pendrive ” இனை பூரண கொள்ளளவுடன் பயன்படுத்துவதற்கு ஒப்பிடலாம்.

எனவே புதிய தகவல்களைக் கற்பதற்கு முன் ஆகக்குறைந்தது 7 மணித்தியால ஆழ்ந்த தூக்கம் அவசியம். அப்பொழுதுதான் அடுத்த நாள் கற்பவற்றை முடிந்தளவு எமது மூளையில் ஏற்றிக் கொள்ளலாம். அதே போல் கற்பதன் பின் போதிய ஆழ்ந்த தூக்கம் இருந்தால் மட்டுமே நாம் கற்பவற்றை நீண்ட கால ஞாபகத்தில் நல்ல உறுதியுடன் சேமித்து வைக்கப்படும்.

படுக்கையில் படுத்திருந்தால் ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி படித்தல் மிகவும் அவசியம். இன்றைய ஆராய்ச்சி முடிவுகளின் படி நல்ல ஞாபக சக்தியுள்ளவர் என்போர் நல்ல தொடர்புபடுத்தக்கூடிய ஆற்றல் உள்ளவர்களே (good associators)ஆவார்.

மேலும் உடலையும் மூளையையும் நல்ல ஆரோக்கியமான நிலையில் பேணுதல் வேண்டும். ஆரோக்கியமான நிறையுணவு, போதிய உடற்பயிற்சி, நகைச்சுவை உணர்வு போன்றன ஞாபகசத்தியைத் தூண்ட உதவும். மூளையானது எமது உடல் நிறையில் 2 வீதமே இருக்கின்ற போதிலும் எமது சக்திப் பயன்பாட்டில் 20 வீதத்தினைப் பயபப்டுத்துகின்றது.

எனவே நாம் சிறந்த முறையில் மூளையினைப் பயன்படுத்தி ஞாபகத்தினைக் கூட்டவேண்டுமெனில், போதியளவு குளுக்கோசும் ஒட்சிசனும் மூளைக்குக் கிடைக்க வேண்டும். ஆகவே மாணவர்களும் ஏனையோரும் காலையுணவு கட்டாயம் உண்பது அவசியம்.

உடலிற்கும் பயிற்சி செய்வது போல மூளைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். எவ்வாறு தசைகள் பலம் பெறுமோ அவ்வாறே மூளையும் பலம் பெறும். சதுரங்கம் குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றன மூளைப் பயிற்சிக்கு உதாரணங்களாகும்.

இறுதியாக ”ஞாபகசக்தி” என்பது பரம்பரை சார்ந்தது அன்று. சூழலின் தாக்கம் மற்றும் எமது முயற்சி என்பவற்றிலேயே தங்கியுள்ளது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. எனவே நாமும் நல்ல ஞாபகசக்தி உள்ளவராக வாழ்க்கையிலே ஏன் முன்னேறக் கூடாது?

 

 

Leave a Comment