FWC

கற்றலுக்கு வலுவூட்டும் பாட விதானமும் இணை பாட விதானமும்

மாணவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்து வாழ்க்கையைச் சீர்செய்வதற்காக அரசினால் பாடசாலைக் கலைத்திட்டத்துடன் இணைப்பாட விதானச் செயற்பாடுகளை செயன்முறைப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் தாண்டவமாடுகின்றன. முன்பள்ளிச் செயற்பாட்டினதும் பாடசாலைச் செயற்பாட்டினதும் முதலாவது அங்கம் இணைப்படவிதானச் செயற்பாடுகளேயாகும். குறிப்பாக விளையாட்டு நிகழ்வுகள் உடல் உள வலிமையைத் தருகின்றன. போட்டிகளில் பங்குபற்றுவதால் ஜனநாயக தன்மை சமூகத்தில் முன்னோடியாகச் செயற்படும் திறன் என்பவற்றின் தோற்றுவாயாகி ஆளுமை விருத்திக்கு தளமிடுகின்றன. கற்றில் மட்டும் தனித்துவமாகச் சங்கமிக்கும் போது வாழ்க்கையில் பயம், விரக்தி, கோபம் போன்ற அசாதாரண நிலைமைகள் விரவிக் காணப்படும்.  பிள்ளைகளின் முயற்சி, எண்ணம், கவனம் என்னும் அனைத்தும் கற்றலுக்கு அவசியம் ஆயின் கற்றலோடு இணைந்து ஒய்வு, பயிற்சி, உறக்கம், உணவு, கலைகளின் இரசனை, இறைவழிபாடு என்பன இணைதல் வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது. அதன்போது முழு மனித விழுமியங்களையும் தழுவிய நிறைவான வாழ்வு அமையும் என நம்பப்படுகிறது.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் தமது பிள்ளையின் கற்றலை பாதிக்கும் என சமகாலப் பெற்றோர்களில் பலர் நம்புகின்றனர். மாறாகச் சிலரால் தூண்டப்படுகின்றனர். இம்மனநிலை எங்குமே விரவிக் காணப்படுவது ஆரோக்கியமானதொன்றல்ல. இம்மனநிலை மாணவர்களின் பிறழ்வான நடத்தைக்கு தூபமிடுவதாகவே அமைகின்றன. இது இயல்பாகவே நாட்டமின்றியிருக்கும். பிள்ளைகளுக்குப் பக்கத்துணையாக அமைந்து வருவது அவதானிக்கத்தக்கது.

ஒரு பிள்ளை தனது வாழ்க்கையில் வெற்றிபெறப் பல சவால்களைத் தாண்ட வேண்டியுள்ளது. பரீட்சையின் வெற்றியால் மட்டும் இதைச் சாதித்துவிட முடியாது. ஏனெனில் வாழ்க்கை பரீட்சையின் வெற்றியில் தங்கியிருக்கவில்லை. வாழ்க்கை தனது பிள்ளையாகவே உங்கள் பிள்ளைகளையும் உங்களையும் கருதுகின்றது

இணைப்பாட விதானம்

இணைப்பாட விதானம் பாடவிதானத்துடன் நெருங்கிய தொடர்புடைய பாடவிதானத்திற்கு வலுசேர்ப்பது ஆயின், பாடங்களில் கற்ற தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட விடயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விரைவாகவும் வாழ்க்கையோடு இயைபுபடுத்தும் தன்மையுடையது. வகுப்பறைக் கற்றல் நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூகப் பொருத்தப்பாடுடைய பல்வகை ஆற்றல்களைக் கொண்ட முதல்தர ஆளுமை படைத்த விருத்தியடைந்த மனப்பாங்குககளை உடைய பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பாடப்பிறச்செயல்கள் அனைத்தும் இதில் உள்ளடங்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட இணைப்படவிதானச் செயற்பாடுகள் கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சுருங்கக் கூறின் எமையறியாமலே தேசிய ஐக்கியம், தேசிய ஒருங்கிணைப்பு,என்பவற்றை இவை ஏற்படுத்துகின்றன. அத்துடன் நமது சுற்றாடலைப் பேண வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றன. ஆசிரியர் – மாணவர், ஆசிரியர் – ஆசிரியர், மாணவர் – மாணவர் என்போருக்குமிடையே அன்னியோன்னியமான தொடர்பை ஒழுங்கமைக்கின்றன. இப்பண்புகள் ஊடாகப் பல்வேறு சவால்கள் நிறைந்த உலகில் பொருத்தமான ஆளுமை கொண்ட பிள்ளைகளை உருவாக்கும் என்பது உறுதி.

பெற்றோர் சிந்தனைக்கு

நவீன உலகில் பரீட்சைப் பெறுபேறுகளும் பெறுமானங்களும் வலுவடைந்து வருவதால் கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்தும் மனப்பாங்கு தற்போது விரவிக் காணப்படுகின்றது. இணைப் பாடவிதானத்தின் பெறுமானங்கள், தார்பாரியங்களை கூடுதலாக பெற்றோர்கள் அறிந்துகொள்ளவில்லை. கல்வி அறிவை வழங்குவதுடன் பல்துறை ஆற்றல்களையும் வழங்கும் களமாகப் பாடசாலை அமைய வேண்டும் என்பது கல்வியலாளர்களின் பல்வேறு ஆய்வுகளின் தெளிவான முடிவாக அமைந்துள்ளது. கூட்டு முயற்சிகளிலும் விளையாட்டுக்களிலும் ஆர்வத்துடன் பங்குபற்றும் மாணவர்களே வகுப்பறைச் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் செயற்படுகின்றனர் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆயினும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் இணை பாடவிதான செயற்பாடுகளின் முக்கியத்துவமும் பெறுமானமும் கல்விப்புலத்தால் உணரப்பட்டுள்ளது. எனவே இணைப்பாட விதானச் செயற்பாட்டில் பெற்றோரின் பங்கும் ஆர்வமும் வேண்டற்பாலது. அதைவிடப் பிள்ளைகள் தாம் கற்ற விடயங்களை ஆர்வமாகவும் விரைவாகவும் தெரிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்துகின்றது. இணைப்பாட வித்தனத்தின் ஊடாகச் சமூக பொருத்தப்பாடுடைய பல்வகை திறன்களையுடைய ஆளுமை நிறைந்த பிள்ளைகளை உருவாக்கி சமூகத்துக்கு ஒப்படைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சமகாலத்தில் கற்றலுக்கு மேம்பட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகள் கலைத்திட்டத்திற்கு அமைவாகப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை பெற்றோரும் மற்றோரும் தெரிந்து வைத்திருக்கின்றமை நன்மையைத் தரும். பல்வேறு சவால்கள் நிறைந்த மாறிவரும் உலகில் பல ஆர்வத்துடன் கூடிய ஆளுமை நிறைந்த பிள்ளைகளை உருவாக்கலாம் என்பது நிறுதிடமாக உள்ளது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு

இன்றைய நிலையில் பாடசாலைகளின் பல்வேறு கட்டமைப்புக்கள் அதற்கேற்ற வேலைப்பழுக்கள் என்பவற்றை தாமதமாக்கிக் கற்றல் செயற்பாட்டைத் தாங்கிக்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆயின் பரீட்சைப் பெறுபேறுகளே ஆசிரியர்கள் பாடசாலையினதும் பெருமைக்கு மைக்கல்லாக அமைந்துள்ளமை யாவரும் அறிந்ததே. இதிலேற்படும் தாக்கங்கள் பற்றிப் பல்வேறு தரப்பினருக்கும் வகைக்கூற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது. மேலாக அதிபரைச் சார்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் ஒரு பிள்ளையின் வாழ்வியலில் பாடவிதானமும் இணை பாடவிதானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை அங்கீகரித்தும் பிள்ளைகளின் பெற்றோருக்கும் தெளிவுபடுத்துவதே ஆசிரியர் கடமையாகும்.

சில வரையறைகளைத் தாண்டி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் இணைப்பாட விதான செயற்பாடுகளில் பங்குபற்றச் செய்வதுடன் தானும் தன்னால் இயன்றளவுக்கு இயன்ற துறைகளில் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். சில பிள்ளைகளைப் பயனடையச் செய்யும் அதேவேளை ஆசிரியர்களும் பல்வேறு நலன்களையும் பலத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக ஆசிரிய மாணவ உறவு வலுவடையும். சக ஆசிரியர்களின் உறவு நிலை மேம்படையும். இதனால் முரண்பாடுகள் முறிவடையும். ஆசிரியர்கள் மாணவர்களிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். பாடசாலையில் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதனை ஏற்றுக் கொள்ளவும் செயற்பாடுகளைத் திட்டமிட மதிப்பிட, முகாமைசெய்ய வாய்ப்புக்களை ஏற்படுத்தும். மாறாக இதை நடைமுறைப்படுத்துவதில் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். இம் முரண்பாடுகளை நீக்க முறையான திட்டமிடல் ஆரோக்கியமான மனநிலை வெற்றியைத் தரும் என இயைவு கூறலாம். ஆகவே சகல தரப்பினரதும் கூட்டு முயற்சியே நல்ல விளைத்திறனை ஏற்படுத்தும் என்பது உறுதி.

மாணவர் சிந்தனைக்கு

வாழ்க்கைப் பயணத்தின் வெற்றிக்குப் பக்கபாலமாக இருப்பவை இணை பாடவிதானச் செயற்பாடுகளே என்பதை ஒவ்வொரு மாணவரும் அங்கீகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் ஏதோ ஒரு முறையில் வித்தகராக மாறுவது வரவேற்கத்தக்கது. எனின், பாடவிதானத்தையும் இணை பாட விதானத்தையும் சமந்தாரக் கோடாக எடுத்துச்செல்ல முன்வருவோம். ஒவ்வொரு குழந்தையும் தனது பிறப்புரிமையின் அடிப்படையில் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கும். இது விரும்பியோ விரும்பாமலோ அரச உரிமையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சமயக் கல்வியின் முக்கியத்துவத்திற்கு கட்டியம் கூறுவதாக ஒழுக்கக் கல்வி அமைந்துள்ளது. ஒழுக்க விழுமியங்களே தனி மனித சமூக வாழ்வியலை நெறிப்படுத்துகின்றன. திருவள்ளுவர் கூட தனது திருக்குறளில் ஒழுக்கம் உயிரை விட மேலானது என இடித்துரைத்துள்ளார்.

சத்தியசாயி பாபாவின் ஒழுக்கக் கருத்துக்களைக் பின்பற்றிய பலரின் ஒழுக்கம் பற்றிய கருத்துக்கள், சிந்தனைகள், வாழ்வியல் முறைகள் மனதை உலுக்குகின்றன. இவற்றுக்கு அடித்தளமாகச் சித்தரிக்கப்படுவது இணை பாடவிதானமே எனலாம். தலைமைத்துவம், முகாமைத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, குழுச்செயற்பாடு ஆகியவற்றினூடாக சிறந்த தொழில்வாய்ப்பைப் பெறவும் நல்லிணக்கத்துடன் கூடிய சமூக வாழ்வியலுக்கான வாய்ப்பை வழங்கும் எண்ணக்கருவாகவும் விளையாட்டுக்கள் வழிகோலுகின்றன. இவ்வகையில் இணை பாடவிதானச் செயற்பாடுகள் பாடவிதானத்துடன் இரண்டறக் கலந்துள்ளன என்பதை அறிந்து கொள்வோம். சிந்திப்போம். அதற்கேற்ப எம்மை மீளுருவாக்கம் செய்வோம்.

அதிபர்கள்

இணை பாடவிதான செயற்பாட்டை வலுவடையச் செய்வதிலும் காத்திரமான பங்கு அதிபர்களைச் சார்ந்ததாகும். திறமைக்கு முதலிடமேயன்றி முகமனுக்கு முதலிடம் வழங்கப்படும் வாய்ப்பை ஒறுப்பது ஆரோக்கியமானது. இந்நிலையில் மாணவர் பெற்றோர்கள் அதிருப்தி தவிர்க்க முடியாதது. எல்லா மாணவர்களும் எமது மாணவர்களே என்ற நேர் மனப்பாங்குடன் எல்லா மாணவர்களையும் பங்குபற்றுவதை உறுதிப்படுத்தி நோக்கத்தை நிறைவேற்றலாம். விளையாட்டுப் போட்டிக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இல்லங்களை ஏனைய இணை பாடவிதான போட்டியாளர்களுக்கு நடைமுறைப்படுத்தலாம். பொருத்தமான ஒழுங்கமைப்பு முறையில் வளவாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு ஆசிரியர்களையும் பங்காளர்களாக ஆக்கிக்கொள்வதும் செயற்பட வைப்பதும் பொருத்தமானது. இவ்விடயத்தில் எல்லா ஆசிரியர்களையும் ஆசுவாசப்படுத்துவதும் செயற்பட வைப்பதும் வைப்பதும் சிரமமானதே. எனவே இதற்கான தந்திரோபாயத்தை ஏற்படுத்திக் கொள்வதற்குப் பொருத்தமானது இச்செயற்பாட்டில் பெற்றோர்களையும் இணைத்துக்கொள்வதாகும்.

நிறைவாக

இணை பாடவிதானம் என்பது பாடவிதானத்தின் ஒரு அங்கம் என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்வோம். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்களும் எந்தளவுக்கு முக்கியமோ ஒரு பிள்ளையின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்குப் பாடவிதானங்களும் முக்கியமானவை. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு இணை பாடவிதானத் துறையில் தம்மை இணைத்துக்கொண்டு அத்துறையில் சிறப்பியல்புகளை தாமதக்கிக் கொண்டால் பண்புசார்ந்த நற்பிரஜை சமூகத்தில் என்பது நிறுத்திட்டமான உண்மை.

 

Leave a Comment